யாராலும் மறக்க முடியாத பொள்ளாச்சி பாலியல் வழக்கு (Pollachi Sexual Abuse Case Full Story)
அமைதியாகத் தொடங்கிய ஒரு முடிவின் ஆரம்பம்:
அந்த ஒரு அறிவிப்பு (Notification) வரும் வரை. முகநூலில் (Facebook), “சபரிராஜன்” என்ற பெயரில் ஒரு புதிய நபரிடமிருந்து நட்பு கோரிக்கை (Friend request) வருகிறது. அந்த பெயர் அவளுக்கு பரிச்சயமில்லை. ஒரு கணம் தயக்கம். “யார் இவர்?” என்ற கேள்வி மனதில் தோன்றுகிறது.
ஆனால் அடுத்த நொடியே, “இது இணைய உலகம் தானே… ஏற்றுக்கொண்டால் என்ன ஆகும்?” என்ற சாதாரண எண்ணம் மேலோங்குகிறது.
அவள் அந்த நட்பு கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறாள்.
அந்த ஒரு செயல், அவளுடைய வாழ்க்கையை முழுமையாக மாற்றப்போகிறது என்பதை அப்போது அவளுக்குத் தெரியாது.
அதே நேரத்தில், அந்த ஒரு முடிவு பல பெண்களின் வாழ்க்கையை காப்பாற்றப்போகிறது என்பதையும் அவள் அறியவில்லை. அந்த கோரிக்கையை அனுப்பியவர்களுக்கும், இது அவர்களுடைய வாழ்க்கையின் முடிவை நோக்கிச் செல்லும் தொடக்கம் என்பதறியாமலேயே, எல்லாம் அமைதியாக ஆரம்பமாகிறது.
காதல் என்ற போர்வையில், நம்பிக்கையை ஆயுதமாக மாற்றி, காமவெறியால் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த கொடூரமான நிகழ்வுகள் இதன் பின்னால் மறைந்திருந்தன.
இது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றிய முழு பதிவா இருக்க போகுது,
இது, தமிழ் Decodes வழங்கும் “Behind Closed Doors” தொடரின் ஒரு பகுதி.
நம்பிக்கையை வலையாக மாற்றிய திட்டம்:
2019 பிப்ரவரி 24, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், 19 வயதான ஒரு இளம் பெண் நால்வர் மீது பாலியல் தொல்லை அளித்ததாக ஒரு புகாரை பதிவு செய்கிறாள்.
அந்த புகாரில் குறிப்பிடப்பட்ட பெயர்களில் ஒருவர் — சபரிராஜன். முகநூல் மூலம் அவளுக்கு அறிமுகமான ஒரு புதிய நபர். ஆரம்பத்தில், சாதாரண உரையாடல்களாகத் தொடங்கியது. காலப்போக்கில், அவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கிறது.
ஆனால், இது இயல்பான உறவு அல்ல. திட்டமிட்டு விரிக்கப்பட்ட ஒரு வலை.
இனிமையான வார்த்தைகள், பாசத்தைப் போலத் தோன்றும் நடத்தை, உணர்ச்சிகளைத் தூண்டும் உரையாடல்கள் — இவையெல்லாம் அவளுடைய நம்பிக்கையைப் பெறுவதற்காக அமைக்கப்பட்ட நாடகங்களாக மாறுகின்றன. அவளுக்குத் தெரியாமல், அந்த நம்பிக்கை அவளுக்கு எதிரான ஆயுதமாக மாறிக் கொண்டிருக்கிறது.
அவன் திட்டமிட்ட நாள் மெதுவாக நெருங்குகிறது.
ஒரு நாள், “முக்கியமான விஷயம் பேச வேண்டும்” என்று கூறி, அவளை பேருந்து நிலையம் அருகே வருமாறு அழைக்கிறான். அவளும் எந்த சந்தேகமும் இன்றி, அவன் சொன்ன இடத்திற்குச் செல்கிறாள். அவளுடைய மனதில் அது ஒரு சாதாரண சந்திப்பாகவே தோன்றியது.
அது பிப்ரவரி 12, 2019 — அவள் புகார் அளிப்பதற்கு 12 நாட்களுக்கு முன்பு.
அங்கு சென்றவுடன், சபரிராஜன் தனியாக இல்லை என்பதை அவள் கவனிக்கிறாள். அவனுடன், திருநாவுக்கரசு என்ற நண்பனும், ஒரு கார் அருகே நின்று கொண்டிருக்கிறார்கள்.
அந்த தருணத்தில், அவள் இன்னும் உணராத ஒரு உண்மை — அவள் ஏற்கனவே ஒரு கொடூரமான வலையில் சிக்கிக் கொண்டிருந்தாள்.
நம்பிக்கை சிக்கிய தருணம்:
ஒரு கணம், அவளின் மனதில் சந்தேகம் தோன்றுகிறது. சமூக வலைத்தளத்தில் அறிமுகமான இரண்டு நபர்களும் ஒன்றாக இருப்பது எப்படி? எதோ ஒரு பயம் உள்ளத்தில் எழுகிறது. இருந்தாலும், அவர்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதால், அவர்களை நம்பி அவர்கள் காரில் ஏறுகிறாள்.
அவள் எடுத்த அந்த ஒரு முடிவு அபாயகரமானதாக மாறிக் கொண்டிருந்தது.
திருநாவுக்கரசு வண்டியை இயக்கத் தொடங்குகிறான். பின்புற இருக்கையில், சபரிராஜனும் அந்த பெண்ணும் அமர்ந்து பேசி கொண்டு வருகிறார்கள். சில நிமிட பயணத்தில், மேலும் இரண்டு பேர் திடீரென அந்த வண்டிக்குள் ஏறுகிறார்கள். வண்டி நகரத் தொடங்குகிறது.
பயணத்தின் நடுவில், அந்த பெண்ணிடம் அவர்கள் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள். அவளுடைய விருப்பத்திற்கும், பாதுகாப்பிற்கும் எதிராக நடந்த அந்த செயல்கள், அவளை முழுமையாக அச்சத்தில் ஆழ்த்தியது. அந்த நிகழ்வை அவர்கள் பதிவும் செய்தும் வைத்துக் கொள்கிறார்கள்.
அதன் பின்னர், அவளிடம் இருந்த நகைகளை பறித்து, தாங்கள் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். “நாங்கள் அழைக்கும் போது வர வேண்டும், நாங்கள் கூறும் விஷயங்களைச் செய்ய வேண்டும்” என்று கூறி, அவளை மனஅழுத்தத்திலும் பயத்திலும் சிக்கவைக்கிறார்கள்.
அந்த தருணத்தில், அவள் எதிர்கொண்ட பயமும், உதவியற்ற நிலையையும் வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.
ஒரு புகாரில் வெளிச்சத்துக்கு வந்த மறைந்த இருள்
அந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த பெண் என்ன செய்வது என்று அறியாமல் பயத்தில் கதறி அழுகிறாள். அந்த கொடூர அனுபவத்தின் அதிர்ச்சியில், வீட்டில் எதையும் சொல்லாமல் மறைத்து வைக்கிறாள். ஆனால், அந்த நபர்கள் தொடர்ந்து மிரட்டத் தொடங்குகிறார்கள்.
இறுதியில், பயமும் அழுத்தமும் அதிகரிக்க, அவள் நடந்த அனைத்தையும் தனது குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்கிறாள்.
இந்தச் செய்தியை அறிந்த அவளுடைய சகோதரன் கடும் கோபமடைகிறான். தனது நண்பர்களுடன் சேர்ந்து, சம்பந்தப்பட்ட நபர்களில் இருவரை கண்டுபிடிக்கிறார்கள். அவர்களை பிடித்து எதிர்கொள்ளும் போது, அவர்களிடம் இருந்த கைப்பேசியை கைப்பற்றுகிறார்கள்.
அந்த சாதனத்தில் இருந்த பதிவுகளை நீக்க முயன்றபோது, ஒரு அதிர்ச்சி அவர்களை காத்திருந்தது.
இது ஒரே ஒரு பெண்ணின் மீது நடந்த சம்பவம் அல்ல. இதேபோன்ற செயல்கள் பல பெண்களிடம் நடந்திருந்தது என்பது அப்போது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சகோதரன், தனது சகோதரியின் துணையுடன், பிப்ரவரி 24ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரை பதிவு செய்கிறான்.
அந்த புகாரின் அடிப்படையில், சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக பெண்களைத் துன்புறுத்தல், வலுக்கட்டாய செயல்கள், வழிப்பறி, தனியுரிமை மீறல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
ஆனால், இது இங்கேயே முடிவடையவில்லை.
புகார் பதிவு செய்யப்பட்டதற்குப் பிறகு, அந்த பெண்ணின் சகோதரனை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கும் தனியாக ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் அடுத்தடுத்த திருப்பங்களை எடுக்கத் தொடங்கியது.
காவல்துறை விசாரணையில், பல கைப்பேசிகளும் மற்றும் கணினிகள் கைப்பற்றப்பட்டது. அவற்றில், பல பெண்களின் பதிவுகள் இருப்பது தெரிய வந்தது.
அப்போது தான் ஒரு உண்மை வெளிப்பட்டது.
இந்தச் சம்பவம், ஒரு பெண்ணின் கதையல்ல.
அது ஒரு மிக பெரிய பனிப்பாறையின் நுனிப் பகுதி மட்டுமே (tip of the Iceberg).
ஊடகங்களில் வெளியான தகவல்களின் படி, பல ஆண்டுகளாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல பெண்கள் இந்த வலையில் சிக்கி இருக்கிறார்கள் என்று கணிக்கப்பட்டது. (இவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கைகள் அல்ல.)
வெளிப்பட்ட உண்மைகள்… அதிர்ச்சியில் ஆழ்ந்த சமூகம்
இந்தச் சம்பவத்தில் சிக்கியிருந்த ஒரு பெண்ணைச் சார்ந்த காணொளி ஒன்று வெளியேறியது. அந்தக் காணொளியில், பயத்தில் கதறி அழும் அவளின் குரல் பலரின் மனதையும் உலுக்கியது. இந்த நிகழ்வு, சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், பல்வேறு சர்ச்சைகளும் எழத் தொடங்கியது. விசாரணை சரியாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. மேலும், செய்தியாளர் சந்திப்பில், புகார் அளித்த பெண்ணின் அடையாளம் வெளியிடப்பட்டதாக சொல்லப்பட்டது.
சட்டப்படி, பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் அல்லது அடையாளத்தை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 228A). இதுபோன்ற தகவல்கள் வெளியானது பெரிய விவாதத்துக்குக் காரணமாக அமைந்தது.
அதோடு, ஒரு கல்வி நிறுவனத்தில், அந்த பெண்ணின் முழு விவரங்களைக் கொண்ட முதற்கட்ட புகார் நகல் கசிந்தும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு நிகழ்வுகளும், தனியுரிமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியது.
2019 மார்ச் 12ஆம் தேதி, இந்த வழக்கின் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு, விசாரணையை மாநில குற்றப்புலனாய்வு பிரிவிற்கு மாற்றியது (The Crime Branch Crime Investigation Department CB-CID). இருந்தாலும், மக்களின் கோபமும் போராட்டங்களும் குறையவில்லை. அதனைத் தொடர்ந்து, அடுத்த நாளே, இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பிற்கு (CBI - Central Bureau of Investigation) மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்கள் பலர், 30 முதல் 39 வயதிற்குள் உள்ளவர்கள். சமூகத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய வயதில் இருந்த இவர்கள், மனிதநேயத்தை மறந்து செயல்பட்டது அதிர்ச்சியூட்டுகிறது.
இவர்கள் குறிவைத்த பெண்கள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் பொருளாதார ரீதியாக சற்றுப் பின்தங்கியவர்கள். முதலில் நம்பிக்கை ஏற்படுத்தி, பின்னர் மிரட்டல் மூலம் கட்டுப்படுத்தி, பலமுறை துன்புறுத்தியதாக விசாரணையில் தெரிய வந்தது.
2020 ஜனவரி மாதத்தில், மத்திய புலனாய்வு அமைப்பு தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், கோவை நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, மேலும் விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு, மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்ந்து பல திருப்பங்களை சந்தித்துக் கொண்டே இருந்தது.
நீதியின் தீர்ப்பு… உண்மையின் வெற்றி
இந்தச் சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களில் எட்டு பெண்கள் மட்டுமே நேரடியாக சாட்சி வழங்க முன்வந்தனர். பயமும் சமூக அழுத்தங்களும் இருந்தபோதிலும், அவர்கள் எடுத்த இந்த முடிவு மிகவும் துணிச்சலானது.
மொத்தம் 48 சாட்சிகள் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டனர். முக்கியமாக, அவர்கள் வழங்கிய வாக்குமூலங்களில் எந்த மாற்றமும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே நிலைப்பாட்டில் இருந்தது. மேலும், அந்த எட்டு பெண்களும் எந்த வித அடையாளமும் வெளிப்படாத வகையில், பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஒன்பது நபர்களுக்கும் கோவை மகளிர் நீதிமன்றம் கடுமையான தண்டனைகளை வழங்கியது.
- திருநாவுக்கரசு மற்றும் மணிவண்ணன் – ஐந்து ஆயுள் தண்டனைகள்
- சபரிராஜன் – நான்கு ஆயுள் தண்டனைகள்
- சதீஷ் மற்றும் பால் – மூன்று ஆயுள் தண்டனைகள்
- வசந்தகுமார் – இரண்டு ஆயுள் தண்டனைகள்
- பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் – தலா ஒரு ஆயுள் தண்டனை
இங்கு பொதுவாக பலர் நினைப்பது, “ஆயுள் தண்டனை” என்றால் 14 ஆண்டுகள் சிறை என்று. ஆனால் அது முற்றிலும் தவறான புரிதல்.
ஆயுள் தண்டனைக்கு நிர்ணயிக்கப்பட்ட காலவரையறை இல்லை. அதாவது, ஒரு நபர் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய தண்டனையாகவே அது கருதப்படுகிறது. இருப்பினும், குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட காலம் சிறையில் இருந்த பிறகு, அவரை விடுதலை செய்யலாமா வேண்டாமா என்பதை அரசு அல்லது நீதிமன்றம் தீர்மானிக்கலாம்.
இதனால், “ஆயுள் தண்டனை” என்பது வெறும் சில ஆண்டுகளுக்கான தண்டனை அல்ல; அது ஒரு மனிதனின் முழு வாழ்க்கையையே மாற்றும் கடுமையான தீர்ப்பாகும்.
நீதிக்குப் பின் எழும் கேள்விகள்
இந்த வழக்கில் சிலருக்கு பல ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டதற்குக் காரணம், அவர்களால் எத்தனை பெண்களை பாதித்துள்ளனர் என்பதையே அடிப்படையாகக் கொண்டது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு தண்டனைகள் வழங்கப்பட்டன.
இத்தனை ஆதாரங்கள் இருந்தபோதிலும், இந்த வழக்கு நிறைவுக்கு வர பல ஆண்டுகள் எடுத்தது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர். “தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்” என்ற கருத்து இங்கு நினைவிற்கு வருகிறது.
அப்படியிருந்தாலும், வழங்கப்பட்ட தண்டனை பலராலும் வரவேற்கப்பட்டது. இன்னும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணமும் சமூகத்தில் இருந்தது.
இந்தச் சம்பவம், நம் சமூகத்தில் உள்ள ஒரு முக்கியமான பிரச்சனையையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
பல பெண்கள், தங்களுக்கு நேரும் அநீதியை வெளிப்படுத்த அச்சப்படுகிறார்கள். வெளியுலகத்திலும், சில நேரங்களில் குடும்பத்தினரிடமும் கூட அதை பகிர்வதில் தயக்கம் காணப்படுகிறது. இதற்குக் காரணம், அவர்களுக்கு எதிராக எழும் கேள்விகளும், குற்றம் சாட்டும் மனப்பாங்கும் தான்.
“அங்கே போக யார் சொன்னது?”, “அந்த ஆடை ஏன் அணிந்தாய்?” போன்ற கேள்விகள் முதலில் எழுகின்றன. ஆனால், இதே கேள்விகளை ஆண்களிடம் அதே அளவில் கேட்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.
ஒரு நபரின் ஆடை, அவரின் தனிப்பட்ட உரிமை ( இடம் பொருள் ஏவல் அறிந்து). அதை அடிப்படையாகக் கொண்டு யாரிடமும் தவறாக நடந்து கொள்வது எந்த விதத்திலும் நியாயமல்ல. இந்த அடிப்படை உணர்வு சமூகத்தில் வலுவாக நிலைநிறுத்தப்பட வேண்டியுள்ளது.
இந்த மாற்றம் உடனடியாக வராது. அது காலம் எடுக்கும். ஆனால், ஒன்று மட்டும் நினைவில் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு நபர் “வேண்டாம்” என்று கூறும் போது, அதற்கு அர்த்தம் — “வேண்டாம்” என்பதே.

Post a Comment