Header Ads

ஒரு ஓட்டு என்ன மாற்றும்? – உங்கள் வாக்கின் உண்மையான சக்தி (Power of Vote)

ஒரு வாக்கு என்ன மாற்றும்? – உங்கள் வாக்கின் உண்மையான சக்தி (Power of Vote)   



    என் ஒரு வாக்குனால என்ன மாறும்?” – இதுதான் மிகப்பெரிய தவறு!

    உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகம் இந்தியா.

    ஆனா அந்த ஜனநாயகத்தோட தலையெழுத்தை தீர்மானிக்கிற தேர்தல் நாளன்று வாக்கு சாவடிக்கு போக 10 பேரில் 3 பேருக்கு மனசில்லை.

    “என் ஒரு வாக்குனால என்ன மாறிடப்போகுது?” — இந்த ஒரு அலட்சியம் தான் மிகப்பெரிய ஆபத்து.

    இந்த ஒரு அலட்சியம் வரலாற்றையே எப்படி மாற்றியிருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?


தமிழ்நாட்டின் வாக்குப்பதிவு சதவீதம் – கவலைக்குரிய உண்மை:



    100-ல கிட்டத்தட்ட 30 பேர் அன்னைக்கு வீட்ல ஓய்வு எடுக்கவோ அல்லது வெளிய சுத்தவோ போயிட்டாங்க. கடந்த 20 வருஷமா தமிழ்நாட்டோட சராசரி வாக்குப்பதிவு 72% தான்.

    மீதமுள்ள அந்த 28% மக்கள் "எனக்கு இதுக்கும் சம்பந்தம் இல்லை"னு ஒதுங்கி நின்னதோட விளைவு என்ன?

நம்மால் மறக்கப்பட்ட ஒரு பொறுப்பு

        நம்ம பள்ளியில் படிக்கிற காலத்துல இருந்து "வாக்களிப்பது நம் கடமை"னு படிச்சுட்டு வர்றோம். நடக்கவே முடியாத தாத்தா, பாட்டி கூட தள்ளாத வயசுல வந்து ஓட்டுப் போடுறதை நாம பார்த்திருப்போம். அவங்களுக்குத் தெரிஞ்ச அந்தப் பொறுப்பு, எல்லா வசதிகளும் இருக்குற மக்களுக்கு ஏன் இல்லாம போகுது?

    "நான் ஓட்டுப் போடாததுனால என்ன மாறிடப்போகுது?" - இதோ இந்த மாற்றங்கள் தான் நடக்கும்.

127 ஓட்டுகள் – ஒரு தொகுதியின் விதி

    2021ல் நடந்த  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல். நெய்வேலி, விருத்தாசலம், காட்பாடி, தியாகராய நகர் (T.Nagar) உட்பட பல தொகுதிகள்ல வெற்றி-தோல்வியைத் தீர்மானிச்சது வெறும் 1000 வாக்குகளுக்கும் குறைவுதான்.


    குறிப்பா டி.நகர்ல வெறும் 127 வாக்குகள் வித்தியாசத்துல தான் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. யோசிச்சுப் பாருங்க... அந்தத் தொகுதியில அன்னைக்கு ஓட்டுப் போடாம வீட்ல இருந்த ஒரு நூறு பேர் மட்டும் மனசு வச்சிருந்தா, அந்தத் தொகுதியோட பிரதிநிதியே மாறியிருக்கலாம்.


வரலாறும் ஒரு வாக்கும்:


    இந்தியாவோட முதல் பொதுத்தேர்தல் 1952-ல நடந்தது. அப்போ பீகார்ல இருக்குற சாப்ரா தொகுதியில சி.பி. ஸ்ரீவஸ்தவா அப்படிங்கிறவர் போட்டியிட்டார். தேர்தல் முடிஞ்சு எண்ணிப் பார்த்தப்போ, அவர் வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்துல தோற்றுப்போனார்.


    அந்த ஒரு ஓட்டு மட்டும் விழுந்திருந்தா இந்திய நாடாளுமன்றத்தோட முகம் மாறியிருக்கும்.


C.P. Srivastava

    ஸ்ரீவஸ்தவா பின்னாட்களில் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் வலதுகரமா இருந்தவர்.


    ஐக்கிய நாடுகள் சபையோட (UN) ஒரு அமைப்பான சர்வதேச கடல்சார் அமைப்பை (International Maritime Organization - IMO) 16 வருஷம் தலைமையேற்று நடத்தினவர்.


    இங்கிலாந்து ராணி அவருக்கு 'நைட்ஹூட்' (Knighthood) பட்டம் கொடுத்து சிறப்பித்தார்கள்.


அமெரிக்க அதிபர் தேர்தல் (1876)


    அமெரிக்க அதிபர் தேர்தல்ல கூட 1876-ல ரூதர்ஃபோர்ட் பி. ஹேய்ஸ் (Rutherford B. Hayes) ஜெயிச்சது வெறும் ஒரே ஒரு பிரதிநிதி வாக்கு (electrol vote) வித்தியாசத்துல தான்.

    185-க்கு 184 வாக்குகள். அந்த ஒரு ஓட்டு தான் வல்லரசு நாட்டோட அதிபர் யாருன்னு தீர்மானிச்சது

ஒரு வாக்கும், கவிழ்ந்த அரசும்:


    1999 ஏப்ரல் மாசம், நாடாளுமன்றத்துல விழுந்த அந்த ஒரே ஒரு ஓட்டு வாஜ்பாய் அவரோட ஆட்சியைப் பறிச்சது. ஒரு பிரதமரோட வீழ்ச்சிக்கு அந்த ஒரு ஓட்டு காரணமா இருந்தது. ஆனா, அதே வருஷம் அக்டோபர் மாசம் நடந்த பொதுத்தேர்தல்ல, அதே வாஜ்பாய் அவர்கள் மறுபடியும் பிரதமரா அரியணையில ஏறுனாரு.

    அன்னைக்கு நாடாளுமன்றத்துக்குள்ள ஒரு ஓட்டு அவரை வீழ்த்தி இருக்கலாம், ஆனா வெளிய இருந்த லட்சக்கணக்கான சாமானிய மக்கள் தங்களோட ஒரு ஓட்டைச் சரியா பயன்படுத்தினதுனால அங்க மிகப்பெரிய மாற்றம் நடந்துச்சு.     அதாவது, அந்த ஒரு ஓட்டு ஒரு அரசாங்கத்தை வீழ்த்தவும் செய்யும், அதே ஒரு ஓட்டு ஒருத்தரை ஆட்சிக் கட்டில்ல உட்கார வைக்கவும் செய்யும்.     இங்க தகுதியானவர்கள் யார், திறமையற்றவர்கள், மாற்றம் நிகழ்த்திருக்கும்னு சொல்லவரால, ஆனா ஒரு வாக்கு தீர்மானிக்கும் எனபதை மட்டுமே அழுத்தமா சொல்ல வந்துருக்க.

வாக்கு சதவீதம் குறையும்போது என்ன நடக்கும்?

    அதிகமா வாக்களிக்கிற தொகுதிகள் மேல அரசியல்வாதிகளுக்கு ஒரு பயம் இருக்கும். "இங்க மக்கள் விழிப்புணர்வோட இருக்காங்க, நாம சரியா வேலை செய்யலன்னா அடுத்த முறை நம்மள தூக்கி எறிஞ்சிடுவாங்க"ங்கற அழுத்தம் அவங்களுக்கு இருக்கும். ஆனா, வாக்கு சதவீதம் கம்மியா இருக்குற இடத்துல, "இவங்கதான் கேட்க மாட்டாங்களே"ங்கற மெத்தனப் போக்கு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வர வாய்ப்பு இருக்கு.


   நம்ம வாட்ஸ்அப்லயும், எக்ஸ் (Twitter) தளத்துலயும் ஜிஎஸ்டி (GST) பத்தியும், ரோடு சரி இல்லைன்னும், கல்வித் தரம் இல்லைன்னும் பேசுறோம். ஆனா, அந்தப் புகார்களைத் தீர்க்க வேண்டிய இடத்துல யாரை உட்கார வைக்கணும்னு முடிவு பண்ணுற அன்னைக்கு மட்டும் நாம மௌனமா இருக்கோம்னு ? தெரியல


   

     ஒரு சில பெரிய மாநகரங்களில் வாக்கு சதவீதம் கம்மியா இருந்தாலும் அவங்களுக்கு அடிப்படை வசதிகள் வந்துருச்சே. அப்பா அங்க மட்டும் வாக்கு முக்கியம் இல்லையா’னு கேள்வி வரும். காரணம் அந்த இடம் மிக பெரிய தொழில் நகரங்களாக இருக்கும்,


  தொழில் வளர்ச்சிக்கு, அந்த மாவட்டத்தின் வளர்ச்சி மாநிலத்திற்கோ, மாநில வளர்ச்சி நாட்டிற்கோ தேவையாக இருந்திருக்கலாம். அதுனால அடிப்படை வசதி தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம், 


   ஆனால் இது எல்லா இடத்துக்கும் பொருந்துமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. இங்க அரசு இயந்திரங்கள் வாக்கு சதவீதம் அதிகமா இருக்கும் இடத்திற்கு முக்கியத்துவம் குடுக்கும், மற்ற இடத்திற்கு கொடுக்காது என்பது இல்லை. ஆனா அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் மாறும்.


நீங்கள் ஓட்டுப் போடாத ஒவ்வொரு முறையும்…

நீங்கள் அறியாமலேயே:

  1. ❌ தவறான தலைவருக்கு வாய்ப்பு தருறீங்க
  2. ❌ நல்ல வேட்பாளரை தோற்கடிக்கிறீங்க
  3. ❌ அடுத்த 5 வருட வளர்ச்சியை பலி கொடுக்கிறீங்க

NOTA – உங்கள் உரிமை

    யாரைத் தேர்ந்தெடுக்கணும்ங்கறது உங்க தனிப்பட்ட உரிமை. உங்க கொள்கைக்கும், உங்க விருப்பத்திற்கும் ஏத்த மாதிரி யாருக்கு வேணும்னாலும் ஓட்டுப் போடுங்க. "யாரையுமே பிடிக்கலையா?" - மிகப்பெரிய ஆயுதம் 'நோட்டா' (NOTA) இருக்கு. அதையாவது பயன்படுத்துங்க!

மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்:

  காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுறது எந்த அளவுக்கு ஜனநாயகத்துக்குப் புற்றுநோயோ, அதே அளவு ஆபத்து ஓட்டுப் போடாம வீட்ல இருக்குறதும் தான்.


    உங்களைச் சுத்தி ஒரு மாற்றம் வரணும்னு நீங்க ஆசைப்பட்டா, அதுக்கான முதல் படி உங்க விரல்ல இருக்குற அந்த மையில தான் தொடங்கும்.


     வர்ற ஏப்ரல் 23, மறக்காம உங்க வாக்குச்சாவடிக்கு போயி உங்க ஜனநாயகக் கடமையை ஆற்றுங்க.


மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்!


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.