1965 ஜனவரி 25 சென்னை மாகாணம் - தமிழ் மொழிப் போராட்டம்

 

1965 ஜனவரி 25 சென்னை மாகாணம் – தமிழ் மொழிப் போராட்டம்




ஆரம்பித்தது மாணவர்கள் – வெடித்தது கலவரம்

         ஒரு மிக பெரிய கலவரத்தை பார்க்கப்போகிறோம் என்பது தெரியாமல் மாணவர்களால் எந்த வித சலனமும் இல்லாமல் ஆர்ப்பாட்டம் துவங்கப்படுகிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில் சிறிது சிறிதாக அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என பலதரப்பு மக்களிடம் இருந்து ஆதரவு கூடுகிறது. அந்த ஆர்ப்பாட்டம் போராட்டமாக, போராட்டம் கலவரமாக மாறுகிறது. அந்த கலவரத்தை தடுக்க முடியாமல் அப்போதைய சென்னை மாகாணத்தை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அரசு திணறிக்கொண்டிருந்தது.

பொள்ளாச்சி கலவரம் – இராணுவ தலையீடு

        அது சரியாக பிப்ரவரி மாதம் 12ம் தேதி பொள்ளாச்சியில் மிக பெரிய கலவரம் நடக்க ஆரம்பித்தது. கலவரத்தை அடக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது. கலவர காடாக இருந்த அந்த இடத்தில் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. அதில் 10ம் மேற்பட்ட நபர்கள் குண்டு அடிபட்டு இரத்த வெள்ளத்தில் இறந்ததை பார்த்து மிரண்டது அந்த பகுதி.

உயிரிழப்புகள் – உண்மையா? அரசியல் கணக்கு?

அது சரியாக பிப்ரவரி மாதம் 12ம் தேதி பொள்ளாச்சியில் மிக பெரிய கலவரம் நடக்க ஆரம்பித்தது.கலவரத்தை அடக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது. கலவர காடாக இருந்த அந்த இடத்தில் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி துப்பாக்கி சூடும்  நடத்தப்பட்டது. அதில் 10ம் மேற்பட்ட  நபர்கள் குண்டு அடிபட்டு இரத்த வெள்ளத்தில் இறந்ததை பார்த்து மிரண்டது அந்த பகுதி. 


ஜனவரி 25 முதல் பிப்ரவரி வரை 12 வரை அரசால் பதிவு செய்யப்பட்ட இறப்புகள் மட்டுமே 63. ஆனால் 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் இறந்தார்கள் என செய்திகள் செய்தாளில் வந்திருந்தது.


இந்தி திணிப்பு – அண்ணாவின் போராட்டம்



        இந்த மிகப்பெரிய கலவரம் நடந்தது இந்தி திணிப்பிற்கு எதிராக. அனைவரையும் ஒரு அணியில் திரட்டியது தி.மு.க.வை நிறுவிய அண்ணாதுரை அவர்கள். சரியான நேரம் பார்த்து அறுவடை செய்திருந்தது தி.மு.க. என்ற கட்சி. ஒரு மொழி, மொழியின் மீது உள்ள பற்று என்பதை வைத்துக் கொண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தி காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வேரோடு அறுத்து எறிந்திருந்தது. அது மட்டுமா இந்தியாவில் முதல் முதலில் ஆட்சி அமைத்த மாநில கட்சி என்ற பெருமையை கொண்ட ஒரு கட்சி தி மு க.


இந்தி எதிர்ப்பு – தேசிய அளவிலான போராட்டம்

        எல்லாருக்கும் 1937ல் இருந்துதான் மொழி போர் ஆரம்பித்தது என்பது தெரியும், ஆனா அதற்கான அடித்தளம் 1918ல் காந்தி அவர்களால் போடப்பட்டது என்பது தெரியுமா? தமிழ்நாடு மட்டுமல்ல வேறு மாநிலங்களும் இந்திக்கு எதிராக போரட்டம் செய்தார்கள் என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும்? மொழி போர் தெரிந்ததை விட தெரியாத தகவல்கள் கேட்டிராத வரலாறை பார்ப்போமா?


                இது தமிழ் Decodes வழங்கும் The Lost Frame.. 


வழியொளியில் காணொளியை காண இங்கே சொடுகவும்

 

மூன்று மொழி கொள்கை – இந்தியாவின் அடிப்படை பிரச்சனை

     மேற்கு வங்காளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், மஹாராஷ்ட்ரம் போன்ற மாநிலங்களும் இந்தி மொழிக்கு எதிராக போராடினார்கள். ஆனால் தமிழ்நாட்டில் நடந்த அளவுக்கும் இரத்தம் சதையுமா வேறு எங்கேயும் இல்லை. தமிழகத்தில் நடந்த மொழி போர் தான் இந்தி நம் மீது திணிக்கப்படாமல் இருக்க முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

    3 மொழி இல்லை இந்தி திணிப்பு சுதந்திர இந்தியாவிற்கு முன்பு இருந்தே பிரச்சனையாக இருக்கும் ஒரு விஷயம் தான். இந்தி திணிப்பு ஆரம்பித்த வருடம் 1937 இல்லை 1906. 1906ம் ஆண்டில் இருந்ததே இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனை இருந்து கொண்டே இருந்தது. 

காந்தி மற்றும் 1918 ஹிந்தி சாகித்ய சம்மேளனம், Indore

     இந்தி தெற்கு மாநிலங்களிலும், தமிழ் போன்ற செம்மொழிகளை வடக்கிலும் ஆங்கிலத்திற்கு பதிலாக இருக்க வேண்டும் என்று காந்தி விரும்பினார். ஆனால் இந்தி மொழியில் கவனம் செலுத்தியதால் இந்த என்னம் திசை மாறியது. அதே 1918ல் ஹிந்தி பேசாத தென்னிந்திய மக்களிடம் ஹிந்தி மொழியை சேர்க்க தென்னிந்திய இந்தி பிரச்சார சபை என்ற ஒரு கல்வி அமைப்பை உருவாக்கினார். இதற்காகவே காந்தி அவர்களால் நிதி திரட்டப்பட்டது.

இந்தியும் காந்தியும் 

    காந்தி அவர்களால் சொல்லப்பட்ட வார்த்தைகள் இதோ. வட இந்தியாவில் வாழும் மக்கள் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு கற்றுக்கொள்ளாமல், இந்தியாவில் அதிகமாக பேசும் மொழியான இந்தியை தென்மாநில மக்கள் கற்ற வேண்டும். இதனால் இந்தியா முழுவதும் இணைக்க முடியும் என்று கூறி இருந்தார். இதுதான் இந்தி திணிப்பிற்கு ஆரம்பமாக இருந்தது.

1937 – இந்தி கட்டாயம்: முதல் போராட்டம்

        இதன் பின்பு  1937 இந்தி கட்டாயம் என்று அறிவிப்பு வந்தது அதை எதிர்த்து திராவிட கழகம் பெரியாரின் கீழ் போராட்டம் நடத்தினார்கள். பின்பு அதே போல் 1950ல் அலுவல் மொழி சட்டம் ஹிந்தி அதிகாரப்பூர்வ மொழியாகவும், 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் தற்காலிக இணைப்பு மொழியாகவும் இருக்கும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்பொழுதும் மிக பெரிய ஒரு போராட்டத்தை தி மு க கையில் எடுத்தார்கள். 


சரியாக 15 வருடம் களித்து 1965ல் ஹிந்தி கட்டாயம் என்ற ஒரு அறிவிப்பு வந்தவுடன் ஆர்ப்பாட்டம் மாணவர்கள் வழியில் ஆரம்பித்தது. 1918ல் இருந்து முளைத்த ஒரு விஷயம், 1937ல் விதைத்த மற்றொரு விஷயம் இரண்டும் அறுவடைக்கு தயாரான நாள். 


        சரி 1937ல் இருந்தே வருவோம். 1937ல் ராஜாஜி சென்னை மாகாணத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி மொழி கற்பிப்பதை கட்டாயமாக்கினார். இந்த நடவடிக்கை 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின் மூலம் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்டோர் வழிகாட்டுதலில் போராட்டம் வெடித்தது.


        போராட்டத்தில் ஈடுபட்டோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சென்னையில் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்ற நடராசனின் உடல் நலம் குன்றி 15-1-1939 அன்று உயிரிழந்தார். இவருடைய உயிர் இழப்புதான் மொழிப் போராட்டத்தின் முதல் களப் பலி. அவரைத் தொடர்ந்து, அதே ஆண்டு மார்ச் 12-ம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து சென்னை சிறையில் உயிர் நீத்தார்.  இந்த இரண்டு உயிர் பலிகளால் போராட்டம் தீவிரமடையவே, இந்தி மொழி தொடர்பான அரசாணையை 21-2-1940 அன்று அரசு திரும்பப் பெற்றது. 


1948 – மீண்டும் ஒரு கட்டாயம், மீண்டும் ஒரு போராட்டம்

   அடுத்து, 1948-ல் ஓமந்தூரார் முதல்வராக இருந்தபோது இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மீண்டும் கிளர்ச்சி ஏற்பட்டதால், அரசு பின்வாங்கியது. 


1965 – கட்டாய இந்தி: மாணவர் கலவரம்



26-1-1965 அன்று முதல் இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற 1963-ம் ஆண்டின் ஆட்சி மொழி சட்ட மசோதாவால் மீண்டும் போராட்டம் உருவானது. இதனால், அண்ணா தலைமையில் இயங்கிய திமுகவின் போராட்டம் தீவிரமானது.


அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த சின்னசாமி அவர்கள் திருச்சி ரயில் நிலையம் எதிரே 25-1-1964 அன்று தீக்குளித்து மாண்டார். இந்த இறப்பு மேலும் கிளர்ச்சியை தூண்டியது. 1965 ஜனவரி 25 மாணவர்கள் இயக்கம் கிளர்ச்சியில் இறங்கின. மாணவர்கள் என்றால் கல்லூரி செல்பவர்கள் மட்டுமல்ல 10வது 12வது படிக்கும் மாணவர்களும் கலந்து கொண்டார்கள். 


சென்னை மாநகராட்சி ஊழியராக பணி யாற்றி வந்த கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் முத்து என பலர் தன்னுயிரை மாய்தனர். 27-ம் தேதி ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஊர்வலமாகச் சென்ற சிவகங்கை மாணவர் ராசேந்திரன், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். 


அதன் பிறகு, போராட்டம் மேலும் மேலும் வேகமெடுத்தது. போலீஸ் துப்பாக்கிச் சூடுகளும் அதிகரிக்க, உயிர்ப் பலிகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன. இதன் பிறகுதான் ஆரம்பத்தில் பார்த்த பொள்ளாச்சி சம்பவம் நிகழ்கிறது. அரசு கணக்கு படி 10 பேர், ஆனால் அன்று 100கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள்.


இருந்தும் தமிழகத்தில் பல பகுதியில் போராட்டம் கலவரம் ஓயவில்லை. மாணவர்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அண்ணா அறைகூவல் விடுத்தார். ஆனால், போராட்டத்தை கைவிட தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு மறுத்துவிட்டது.


இந்தித் திணிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் போக்கைக் கண்டித்து அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ.வி. அழகேசன் ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்தனர். 


இதன் பிறகே வேறு வழியின்றி இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரும் என்ற முடிவுக்கு ஆட்சியாளர்கள் வந்தனர். அதன் பின் படிப்படியாக கலவரம் கட்டுக்குள் வந்தது.

1967 – தி.மு.க. ஆட்சிக்கு வந்தது!

இந்த ஒரு போராட்டத்தின் தாக்கம் அதோடு முடியவில்லை. 1967-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு திமுக ஆட்சியைப் பிடித்தது. அன்று தமிழகத்தில் ஆட்சியை இழந்த  காங்கிரஸ் கட்சி இது வரை ஆட்சி அமைக்க திணறிக்கொண்டிருக்கிறது.


1937ல் இருந்து மொழியை வைத்து ஆரம்பித்த ஆட்டம் 1967ல் ஆட்சி கட்டிலில் அமரவைத்து. மொழிக்கு இவ்வளவு பெரிய போராட்டம், கலவரம், உயிரிழப்பு வேறு எந்த இடத்திலும் நடக்காத ஒரு நிகழ்வு. தமிழால் தமிழ் மக்களால் மட்டுமே இன்று இந்தி இணைப்பு மொழியாக இல்லாமல் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் போரட்டம் நடத்தியது. ஆனால் தமிழ் நாட்டில் நடந்த அளவிற்கு இல்லை.

மொழிப் போராட்டத்தின் முக்கியத்துவம்

இப்பேர்பட்ட மொழியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?


ஆங்கிலம் தமிழும் கலந்த வார்த்தைகள். முந்தைய பதிவில் சொன்னது போல் மருந்தகம் பார்மசி ஆகவும், நகைக்கடை ஜீவல்லரி ஆகவும், துணிக்கடை சில்க்ஸ், டிரஸ் ஆகவும் மாறி இருக்கிறது. 


செம்மொழி அந்தஸ்து பெற்றால் மட்டும் போதுமா? தமிழ் என்ற பெருமை மட்டும் போதுமா? தமிழே பயிலாத மிக பெரிய சமூகத்தை வைத்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு மிகவும் பெருமை வாய்ந்த தமிழை எவ்வாறு கடத்துவது.  கற்றது தமிழ் என்ற ஒரு படம் தமிழ் படித்தவர்களின் நிலைமையை காட்டியிருக்கும். 


அத்தகைய சூழல் தான் தற்பொழுது இருக்கிறது. தமிழ் மொழி வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன். உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.

🔔 மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம். நன்றி!

💡 #தமிழ்மொழி #மொழிப்போராட்டம் #இந்திதிணிப்பு #அண்ணாதுரை #திமுக #தமிழகபோராட்டம் #TamilHistory #MozhiPorattam #1965LanguageProtest #SaveTamil #IndianHistory

கருத்துரையிடுக

0 கருத்துகள்